search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி ஸ்டிரைக்"

    மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றாததை கண்டித்து தீபாவளி பண்டிகைக்கு பின் மீண்டும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் மேற்கொள்ள போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
    சேலம்:

    லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் 8 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் டீசல், சுங்க கட்டணம், 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றின் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. ஆனால் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் கண்டுகொள்ளவில்லை.

    மேலும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். லாரி தொழிலை விட்டு வேறு தொழிலுக்கும் மாறி வருகிறார்கள்.

    இதற்கிடையே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதில் மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றாததை கண்டித்து தீபாவளி பண்டிகைக்கு பின் மீண்டும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் மேற்கொள்ள உறுதி செய்யப்பட்டது.

    இதனால் அகில இந்திய அளவில் 70 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் ஓடாது. இந்த தொழிலை நம்பி உள்ள 1½ கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரவும் வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறியதாவது:-

    லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை 3 மாதங்கள் ஆகியும் மத்திய அரசு நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டீசல் விலை 80 ரூபாயை நெருங்கி உள்ளதால் லாரி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் முடிவுப்படி தீபாவளிக்கு பிறகு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை. எனவே மத்திய அரசு வேலை நிறுத்தம் தொடங்கும் முன்பு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    8 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து ஈரோட்டில் லாரிகள் ஓடத் தொடங்கியது. #LorryStrike

    ஈரோடு:

    பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவந்து விலையை குறைக்க வேண்டும் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டிற்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20ஆம் தேதி முதல் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

    எட்டாவது நாளாக நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்த நிலையில் மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து லாரிகள் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.

    ஈரோட்டில் தேங்கி கிடந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வடமாநிலங்களுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிடங்குகளில் அதிகம் இருப்பதால் இவற்றை முழுமையாக அனுப்புவதற்கு சில தினங்கள் ஆகும் என டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    லாரிகள் வேலை நிறுத்தத்தால் முடங்கிக் கிடந்த தொழில்களும் மீண்டும் புத்துணர்வு பெறத் தொடங்கியுள்ளன. வேலை இழந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடங்குகளில் தேங்கிக் கிடந்த சரக்குகளை பார்சல் அலுவலகங்களுக்கு மாட்டு வண்டிகள் மூலமாக அனுப்பி வைக்கின்றனர். லாரிகளில் ஏற்றப்பட்டு தற்போது அனுப்பும் பணியையும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் கடந்த ஒரு வார காலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து இருப்பதால் இவற்றை முழுமையாக அனுப்பி இயல்பு நிலைக்கு திரும்ப சில தினங்கள் ஆகும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். #LorryStrike

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக லாரி ஸ்டிரைக் நடந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது. #LorryStrike #TruckersStrike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    இன்றுடன் 8-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில், இந்த போராட்டத்தில் தமிழகத்தில் 4½ லாரிகள் உள்பட நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் சரக்குகள் போக்குவரத்து அடியோடு முடங்கியது. வட மாநிலங்களில் இருந்து சிமெண்டு, கட்டுமான பொருட்கள், கோழித்தீவன மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகம் வருவது தடைப்பட்டது.

    தமிழகம் மற்றும் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்தன. லாரி டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், இதர பணியாளர்கள் என லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர்.

    மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

    இதனை அடுத்து, ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. நள்ளிரவு முதல் லாரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    லாரி ஸ்டிரைக்கிற்கு ஆதரவாக சென்னையில் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் உணவு பொருட்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. #LorryStrike #vegetables

    திருவொற்றியூர்:

    டீசல் விலை உயர்வு, மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.

    இந்த வேலை நிறுத்தத்திற்கு கண்டெய்னர் மற்றும் டிரைலர்ஸ் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்றுமதி, இறக்குமதிக்காக சென்னை துறைமுகம் செல்லும் 2 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

    இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது என்றும் இதனால் மாதவரம் மஞ்சம்பாக்கம் முதல் காசிமேடு ஜீரோ கேட் வரை 2000 ஆயிரத்திற்கு மேற்பட்ட லாரிகள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    பொன்னேரி மீஞ்சூர் மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கண்டெய்னர் சோதனை மையத்தில் இருந்து ஏற்றுமதி இறக்குமதிக்காக தினமும் சென்னை துறைமுகத்திற்கு 2000 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதுமட்டுமில்லாமல் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களும் குளிரூட்ட பட்ட கண்டெய்னர் லாரிகள் மூலம் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டு கப்பல்கள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்பபடுவதால் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் உணவு பொருட்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே வாடகை உயர்வு குறித்து கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு அளவு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்படுவதால் அன்று மாலையே சமரசம் என்ற பெயரில் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார்களே தவிர இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்ற படாமலே இருக்கிறது. 8-வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #LorryStrike #vegetables

    லாரிகள் ஸ்டிரைக் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #LorryStrike #vegetables

    சிவகாசி:

    சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பட்டாசு தொழில் வெவ்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியாலும், இந்த முறை லாரி ஸ்டிரைக்காலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து ரூ. 300 கோடிக்கும் அதிகமான பட்டாசுகள் ஆலைகளில் தேக்கமடைந்துள்ளன.

    இன்னும் 3 மாதங்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் இப்போதே பட்டாசுகளை ஏற்றுமதி செய்தால் தான் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு போனஸ், முன்பணம் போன்றவை வழங்க முடியும்.

    இந்த நிலை நீடித்தால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யும் நிலைக்கு தடை ஏற்படும்.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த தொழிலை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்களும் சுமார் ஆயிரம் பட்டாசு விற்பனை கடைகளும் உள்ளன.

    எனவே மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #LorryStrike #vegetables

    லாரி ஸ்டிரைக் 8-வது நாளாக நீடித்து வருவதால் இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் மஞ்சள் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. #LorryStrike #vegetables

    சேலம்:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 8-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இப்போராட்டத்தில் தமிழகத்தில் 4½ லாரிகள் உள்பட நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் சரக்குகள் போக்குவரத்து அடியோடு முடங்கி உள்ளது. வட மாநிலங்களில் இருந்து சிமெண்டு, கட்டுமான பொருட்கள், கோழித்தீவன மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகம் வருவது தடைப்பட்டு உள்ளது.

    தமிழகம் மற்றும் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. சேலத்தில் இதுவரை ரூ.400 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. லாரி டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், இதர பணியாளர்கள் என லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு தொழிற்சாலைகளும், பெரிய தொழிற்சாலைகளும் ஏராளமாக உள்ளன. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான லாரிகள் இயங்கி வருகின்றன. வேலை நிறுத்த போராட்டத்தால் பொட்டனேரியில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் இரும்பு தளவாட பொருட்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தேங்கி கிடக்கின்றது.

    இதுபோல் ரசாயண தொழிற்சாலைகளில் உற்பத்தியாகின்ற பொருட்கள் சந்தைப் படுத்த முடியவில்லை. மேட்டூர் தொழிற்பேட்டையில் நாள் ஒன்றுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான மெக்னீசியம் சல்பேட் தேக்கம் அடைந்துள்ளது. மூலப்பொருட்களை லாரிகளில் கொண்டு வரமுடியாத காரணத்தினால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேட்டூர் வட்டாரத்தில் மட்டும் ஒரு வார காலத்தில் ரூ. 100 கோடிக்கு மேல் உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் எரியூட்டப்படும் நிலக்கிரியில் இருந்து நாள் ஒன்றுக்கு 3000 டன் நிலக்கரி சாம்பல் வெளியேறுகிறது. லாரிகள் மூலம் இந்த சாம்பல் செங்கல் உற்பத்திக்கும், சிமெண்ட் உற்பத்திக்கும் எடுத்துச் செல்லப்படும். இந்த சாம்பலும் தொழிற்சாலை வளாகத்தில் அப்படியே தேங்கி கிடக்கிறது.

    சேலம் சத்திரம், பள்ளப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட் பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மஞ்சள் மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் மஞ்சள் சுத்தம் செய்து, தரம் பிரித்து மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற வடமாநிலங்களுக்கு லாரிகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.

    தற்போது ஸ்டிரைக்கால் மண்டிகளில் மஞ்சள் மூட்டை, மூட்டையாக குவிந்து கிடக்கின்றன. ரூ.25 கோடி மதிப்பிலான மஞ்சள்கள் தேக்கம் அடைந்துள்ளது. சேலம், ஆத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் ஜவ்வரிசி, அரிசி, பருப்பு உள்ளிட்ட ஆலைகளில் பொருட்கள் தேங்கி உள்ளன. இதனால் சேலம் மாவட்டத்தில் தொழிலாளகள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

    சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த 8-நாட்களாக வேலை இல்லாத காரணத்தினால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.

    சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

    போராட்டம் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. நேற்று மாநில தலைவர் துறைமுகத்தில் நடைபெற்ற கண்டெய்னர் லாரிகள் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். தீப்பெட்டி தொழிற்சாலைகள் எல்லாம் மூடி விட்டார்கள். துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் லாரி உரிமையாளர்களும் ஆதரவு கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். 95 சதவீதம் லாரிகள் இயங்கவில்லை.

    அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார்கள். இதுவரை மத்திய அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வில்லை. விலைவாசி 10-ல் இருந்து 20 சதவீதமாக உயர ஆரம்பித்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike #vegetables

    லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. #LorryStrike

    ஒட்டன்சத்திரம்:

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    8-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் பெரும்பாலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்திலேயே மிகப் பெரிய காய்கறி மார்க்கெட்டான ஒட்டன்சத்திரத்தில் இருந்து தினசரி 100 டன்னுக்கு மேலாக காய்கறிகள் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

    லாரிகள் ஸ்டிரைக் காரணத்தால் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் வாங்குவதை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர். இதனால் ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து வாங்கிய காய்கறிகள் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கிறது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி 60 முதல் 70 டன் முருங்கைக்காய் பரோடா, பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். லாரிகள் மூலம் அனுப்ப முடியாத நிலை உள்ளதால் தற்போது கோயம்புத்தூர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தினசரி 10 முதல் 20 டன் முருங்கைக்காய் மட்டுமே ரெயில் மூலம் அட்டைப் பெட்டிகளில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இதனால் முருங்கைக்காய் மூலம் மட்டும் தினசரி ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து வெளியூர்களுக்கு காய்கறிகள் அனுப்புவது குறைந்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் மட்டும் குறைந்த அளவு வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரம் ரூ.220-க்கு விற்கப்பட்ட ஒரு பெட்டி தக்காளி தற்போது ரூ.150-க்கு விற்கப்படுகிறது. ரூ.500-க்கு விற்கப்பட்ட கத்தரி ரூ.300-க்கும், ரூ. 100-க்கு விற்கப்பட்ட இஞ்சி ரூ.70-க்கும், ரூ.70-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் ரூ.50-க்கும் விற்பனையாகிறது.

    பெரும்பாலான காய்கறிகள் மார்க்கெட்டை விட்டு வெளியேறினால் சரி என்ற மனநிலையில் வியாபாரிகள் அதனை விற்று வருகின்றனர்.

    விவசாயிகளிடம் இருந்து வாங்கும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ளதால் பெருமளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் காய்கறிகளின் விலை மேலும் வீழ்ச்சியடையும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் வெளி சந்தையில் காய்கறிகள் விற்பனை கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #LorryStrike

    நாடு முழுவதும் நீடிக்கும் லாரி ஸ்டிரைக்கை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பாராளுமன்றத்தில் இன்று அ.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்டுக்கொண்டது. #Parliament #LorryStrike
    புதுடெல்லி:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் தேக்கம் அடைந்து, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.



    மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்தி உள்ளனர்.  லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக், இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.

    லாரி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி. பி.ஆர்.சுந்தரம் மக்களவையில் இன்று பிரச்சினை எழுப்பினார். அப்போது, ஸ்டிரைக் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்திருப்பதாகவும், காய்கறிகள் விலை உயர்ந்து வருவதாகவும் கூறிய அவர், போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. முகமது சலீம் பேசும்போது, லாரி உரிமையாளர்கள் மிக முக்கியமான பிரச்சினையை எழுப்பியிருப்பதால், போராட்டத்திற்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். #Parliament #LorryStrike
    லாரி ஸ்டிரைக் காரணமாக கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. #LorryStrike
    கோவை:

    நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இதன்காரணமாக கோவையில் இருந்து வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பம்புசெட், கிரைண்டர், விசைத்தறி ஜவுளிகள், தென்னை நார் பொருட்கள், காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரி ராஜேந்திரன் கூறியதாவது,

    தினசரி கோவை மார்க்கெட்டுக்கு 100 லாரிகளில் காய்கறிகள் லோடு கொண்டு வரப்படும். இதில் 90 லாரி லோடு காய்கறிகள் கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படும். தற்போது லாரிகள் ஓடாததால் 40 முதல் 50 லாரிகளில் லோடு கொண்டு வரப்படுகிறது. சொந்தமாக லாரிகள் வைத்துள்ள கேரள வியாபாரிகள் மட்டுமே காய்கறிகளை அம்மாநிலத்துக்கு ஏற்றி செல்கின்றனர். இதனால் 90 லாரிகள் செல்ல வேண்டிய கேரளாவுக்கு தற்போது 30 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கோவை சுற்றி உள்ள 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரும் காய்கறிகள் தேக்கம் அடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த வாரம் மொத்த விலையில் 1 கிலோ ரூ. 55 -க்கு விற்பனையான சின்ன வெங்காயம் ரூ. 30 முதல் ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல தக்காளி ரூ. 25 -ல் இருந்து ரூ. 12-க்கும், கேரட் ரூ. 40-ல் இருந்து ரூ. 30-க்கும், கத்தரிக்காய் ரூ. 25-ல் இருந்து ரூ. 20 ஆகவும், முருங்கைக்காய் ரூ. 30-ல் இருந்து ரூ. 20 ஆகவும், புடலங்காய் ரூ. 25-ல் இருந்து ரூ. 20 ஆகவும், பீர்க்கங்காய் ரூ. 30-ல் இருந்து ரூ. 20 ஆகவும், வெண்டைக்காய் ரூ. 30-ல் இருந்து ரூ. 22 ஆகவும், பீட்ருட் ரூ. 30-ல் இருந்து ரூ. 20 ஆகவும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வரும் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து விற்பனைக்கு வரும் உருளை கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவவை தொடர்ந்து விலை உயர்ந்தே காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike

    லாரிகள் வேலை நிறுத்தத்தால் புதுவை காய்கறி வியாபாரிகள் பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும், மினி வேன்களிலும் காய்கறிகளை எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவர வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் புதுவை மாநில லாரி உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளனர். இன்று 6-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தால் புதுவையில் இயங்கும் 3 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை. இவை அனைத்தும் மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரிலும், கோரிமேடு எல்லைப்பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    புதுவைக்கு பெங்களூர், வேலூர், மேட்டுப்பாளையம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிகளவில் வரும். லாரி வேலை நிறுத்தத்தால் புதுவை காய்கறி வியாபாரிகள் பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும், மினி வேன்களிலும் காய்கறிகளை எடுத்து வருகின்றனர். இதனால் புதுவையில் காய்கறிகளுக்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

    ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஒரு சில காய்கறிகளுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மினிவேன் மூலம் காய்கறிகள் மட்டுமின்றி பழங்கள், மளிகை பொருட்கள் ஆகியவையும் தடையின்றி கொண்டுவரப்படுகிறது. #tamilnews
    தருமபுரி அருகே லாரிகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Lorrystrike

    தருமபுரி:

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இன்று 6-வது நாளாக அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 4500 லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில் தருமபுரி வழியாக போராட்டத்தை மீறி இயக்கப்படும் லாரிகளை வழிமறித்து ஆதரவும் திரட்டி வந்தனர். நேற்று கோவையில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் என்பவர் ஒட்டி வந்தார்.

    லாரி தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பொன்னேரி என்ற பகுதிக்கு வந்தபோது திடீரென்று மர்ம நபர்கள் சிலர் கல்லை எடுத்து லாரியின் மீது வீசினர். இதில் டிரைவர் பெருமாள் மீது கல் விழுந்து அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் லாரியை எடுத்து கொண்டு சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

     


    இதுபோன்று ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து கேரளாவுக்கு அரிசி பாரம் ஏற்றி வந்த லாரியை நெல்லூரைச் சேர்ந்த சின்னா என்பவர் ஓட்டிவந்தார். லாரி தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை புறவடை பகுதிக்கு நேற்று மாலை வந்த போது மர்ம நபர்கள் சிலர் கல்லை எடுத்து லாரியின் மீது வீசினர். இதில் லாரியின் முன்பக்க கண்காடி உடைந்தது.

    குஜராத்தில் இருந்து சேலத்தை நோக்கி இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குஜராத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஓட்டிவந்தார். அந்த லாரி அதியமான்கோட்டை புறவடை அருகே வந்தபோது மர்மநபர்கள் கல் வீசினர். இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இதுபோன்று ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மொய்னுதீன் (22) என்பவர் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு கார்களை ஏற்றி சென்ற லாரி அதியமான்கோட்டை புறவடை அருகே வந்தபோது மர்ம நபர்கள் கல் எடுத்து வீசியதில் வண்டியின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    வேலை நிறுத்த போராட்டத்தை மீறி செயல்படும் லாரிகள் மீது இதுபோன்று தாக்குதல் நடைபெறுகிறதா? என்று கோணத்தில் அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    அதியமான்கோட்டை அருகே தொடர்ந்து 3 லாரிகளில் மர்ம நபர்கள் கல்வீசி சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியால் ஈரோடு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் இன்று(புதன்கிழமை)முதல் தங்களது உற்பத்தியை நிறுத்தி உள்ளனர். #LorryStrike

    ஈரோடு:

    லாரி உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந் தேதி முதல் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்திலும் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் முடங்கியுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பிரதான தொழிலாக ஜவுளித் தொழில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து மேற்கு வங்காளம் கொல்கத்தா, ராஜஸ்தான் மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் ஜவுளி துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக பலகோடி மதிப்பிலான ஜவுளிகள் குடோன்களில் தேக்கம் அடைந்து வருகின்றன.

    இதனை அடுத்து ஈரோடு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் இன்று(புதன்கிழமை) முதல் தங்களது உற்பத்தியை நிறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் கூறியதாவது,-

    ஈரோட்டில் மாணிக்கம்பாளையம் வீரப்பன்சத்திரம், நாராயண வலசு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்ப்பட்டு வருகின்றன.

    இங்கு தினமும் ரூ.6 கோடி மதிப்பில் 20 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாட்களாக ரூ. 35 கோடி மதிப்பிலான துணிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. எனவே லாரிகள் வேலை நிறுத்தம் முடியும்வரை விசைத்தறி உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

    இவர் அவர்கள் கூறினர்.

    தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து தான் அதிகளவில் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #LorryStrike

    ×